திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம்.கள் கொள்ளையடிக் கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த வங்கிகளும் அதிர்ச்சி அடைந்தன.
இந்த கொள்ளையில், சம்பவ இடத்தில் எந்த சின்ன க்ளுவும் கிடைக்காத நிலையில், தொடர்புடைய கொள்ளை யர்கள் 10 பேரை ஒரே வாரத்தில் கொத்தாக அள்ளியது தமிழக அரசின் வடக்கு மண்டல காவல்துறை. கொள்ளை யர்கள் கைது செய்யப்பட்டது எப்படி என்பதில் பல்வேறு தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.
கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க தமிழக காவல் துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஐ.பி.எஸ்.ஸின் மேற்பார்வையில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி தலை மையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த 9 தனிப் படைகளுக்கு திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையேற்றிருந்தனர். இதில் திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயனை ஹரியானாவிற்கும், திருவள்ளூர் எஸ்.பி. செபாஸ்கல்யாணத்தை ஆந்திராவுக்கும், வேலூர் எஸ்.பி. ராஜேஷ்கண்ணனை குஜராத்திற்கும், திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணனை கர்நாடகாவிற்கும் அனுப்பி வைத்ததுடன் திருவண்ணாமலையில் ஒரு வாரம் தங்கியிருந்து ஆப்ரேஷனை வழிநடத்தினார் ஐ.ஜி. கண்ணன்.
இதுகுறித்து கண்ணனிடம் கேட்டபோது,” "இரண்டு மணி நேரத்தில் 4 ஏ.டி.எம்.களிலும் காஸ்கட்டரை பயன் படுத்தி, 75 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர். ஏ.டி.எம். மெஷின்களும் சி.சி.டி.வி. கேமராக்களும் எரிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு சின்ன தடயம் (க்ளு) கூட கிடைக்காததால் புலனாய்வு செய்வது சவாலாகவே இருந்தது.
இந்த சம்பவத்தில் எச்சரிக்கை அலாரம் அடித்திருக்க வேண்டும் என்பதால், சம்பந்தப்பட்ட வங்கியின் அலுவலர்களை அழைத்து விசாரித்த போது, அலாரம் அடிக்கவே இல்லை என்றார்கள். அலாரம் ஏன் அடிக்க வில்லை? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இதனால் இந்த கொள் ளைக்கு வங்கித் தரப்பிலிருந்து யாரேனும் உதவியிருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரித்தபோது, கொள்ளையர்கள் நவீன தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாக இருந்திருப்பதால் அலாரத்தை டீயாக்டி வேட் செய்துள்ளது தெரிந்தது. இப்படிப் பட்ட ஏ.டி.எம். மெஷின் கொள்ளைகள் வேறு மாநிலங்களில் நடந்துள்ளதா? என விசாரித்ததில், மத்திய பிரதேசம், அசாம், மகாராஷ்ட்ரா, ஒடிஷா மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கொள்ளை கள் நடந்திருக்கும் தகவல்கள் கிடைத்தன. திருவண்ணாமலையில் நடந்தது போல இது நடந்திருப்பதால் வடமாநில கொள்ளையர்களின் கைவரிசைதான் என முடிவுக்கு வந்தோம்.
இதற்கிடையே, கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். மெஷின்கள் இருந்த சாலைகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை எங்களின் தனிப் படைகள் ஆராய்ந்தபடி இருந்தன. அப்போது, கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப்.பில் உள்ள ஒரு ஏ.டி.எம். மெஷினை இதே போல காஸ் கட்டரை பயன்படுத்தி கொள்ளையடிக்கப்பட்ட தகவல் கிடைத்தது. அதன் சி.சி.டி.வி. காட்சிகளைப் பெற்று திருவண்ணாமலையில் கிடைத்த பதிவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில் ஆந்திர மாநில வாகனப்பதிவு எண் கொண்ட ஒரு டாடா சுமோவை கண்டுபிடித்தோம். அந்த வாகனம் எங்கு சென்றிருக்கிறது எனவும் பிரதான சாலைகளிலிருந்த அனைத்து சுங்கச்சாவடிகளின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தபோது எந்த ஒரு சுங்கச்சாவடியையும் அந்த வாகனம் கடந்து செல்லவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.
பிறகு ஆந்திரா, கர்நாடகா செல்லும் சாதாரண சாலைகளை ஆராய்ந்தபோதுதான் கோலார் (கே.ஜி.எஃப்.) நகரத்தை நோக்கி அந்த வாகனம் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ஓசூர், சித்தூர், பெங்களூர், கோலார் நகரங்களி லுள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்களின் சி.சி.டி.வி. கேமராவை சோதனையிட்டபோது, கோலாரில் ஒரு லாட்ஜில் அந்த டாடா சுமோ இருப்பதையறிந்து அங்கு எங்கள் டீம் விரைந்தபோது, கொள்ளை யர்கள் தப்பிச் சென்றிருந்தனர். லாட்ஜின் உரிமையாளரிடம் விசாரித்ததில், கொள்ளையர்கள் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
உடனே ஹரியானாவுக்கு பயணப்பட்ட கார்த்திகேயன் டீம், அங்கு விசாரித்ததில், மேவாட் மண்டல கொள்ளையர்கள் என அறிந்து அதிர்ச்சியடைந்தோம். ஏனெனில் மேவாட் கொள்ளையர்களுக்கு ஈவு இரக்கமே இருக்காது. தங்களை பிடிக்க வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்துபவர்கள்.
சிலபல சீக்ரெட் ஆபரேசனை பயன்படுத்தி ஆபத்து மிகுந்த மேவாட் மண்டலத்துக்குள் எங்கள் டீம் நுழைந்து மிகச்சாதுர்யமாக கொள்ளையர்களை கைதுசெய்தது''’என்றார்.
யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்? என விசாரித்தபோது ஏகத்துக்கும் பகீர் தகவல்கள்.
இந்தியா முழுவதும் பல மாநில அரசுகளை பயமுறுத்தி வருகிறார்கள் மேவாட் கொள்ளையர்கள். பவேரியா கொள்ளையர்களை விட இவர்கள் பலமடங்கு பயங்கரமானவர்கள்.
மலைக்குன்றுகள் நிறைந்த ஒரு பகுதி மேவாட் மண்டலம். இந்த மண்டலத்தில் ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் ஒருசில பகுதிகள் அடங்கியிருக் கின்றன. இந்து மதத்திலிருந்து முஸ்லீம்களாக மாறியவர்களே இந்த மண்டலத்தில் கணிசமாக இருக்கிறார்கள். இவர்கள் இந்தி பேசும் முஸ்லீம்கள். இவர்களின் தலைவராக இருப்பவரை லாட்ஸ் என்கின்றனர்.
இதுகுறித்து ஆபரேசனில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியபோது, "மேவாட் மண்டலத்தில் பல்வல், ஆல்வா, நூ பகுதிகளில் உள்ள இந்தி பேசும் முஸ்லீம்களின் முக்கிய தொழில், மாடுகளை வளர்த்து விற்பனை செய்வது.
அண்மைக்காலமாக "பசுவின் காவலர்கள்' என்கிற பேரில் (கௌ விஜிலன்ட்) இந்துத்துவா சக்திகள் மேவாட்டில் பல்வேறு கட்டளை களைப் போட்டனர். குறிப்பாக, பசுமாடுகளை முறையாக வளர்க்க வேண்டும். வளர்க்க முடியாவிட்டால் தெருவில் விட்டுவிட வேண்டும். மாடுகளை விற்பனை செய்யக்கூடாது; மாட்டிறைச்சி கடைகளை நடத்தக் கூடாது என ஏகத்துக்கும் கட்டளை யிட்டதால், மிகவும் பாதிக்கப்பட்டனர் இந்தி முஸ்லீம்கள். வருமானம் இல்லாத தால் வறுமை அவர்களைச் சூழ்ந்தது.
இதனால் தெருவில் திரியும் மாடுகளை கடத்திச்சென்று மேவாட் மண்டலத்தை ஒட்டியுள்ள வெளி மாநில கசாப்பு கடைகளில் விற்றனர். இந்தக் கடத்தலால் இந்தி பேசும் முஸ் லீம்களுக்கும் பசுவின் காவலர்களுக் கும் மோதல்கள் நடந்தன. இதனால் அப்பகுதியை விட்டு வெளியேறி தென் மாநிலங்களையும் வடகிழக்கு மாநிலங்களையும் நோக்கி வரவேண் டிய சூழல்.
அவர்களுக்கு மாடு பிசினெ ஸைத் தவிர டிஜிட்டல் டெக்னாலஜி நன்கு தெரியும். வருவாய் இல்லாத தால் ஏ.டி.எம். மெஷின்களின் மீது அவர்களின் பார்வை திரும்பியது. டெக்னாலஜியை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சித்தனர். அது பலன்கொடுக்க, அதனையே வாடிக்கையாக்கிக்கொண்டார்கள்.
கொள்ளையடிப்பதில் ஒரு டீமாகத்தான் செயல்படுவார்கள். அந்த டீமில் குறைந்தது 6 பேர், அதிகபட்சம் 10 பேர் இருப்பார்கள். டீமுக்கு தலைவனாக இருப்பவர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயல்திட்டத்தைப் போட்டுக் கொடுப்பான். எந்த ஏரியாவிலிருக்கும் ஏ.டி.எம்.களை கொள்ளையடிப்பது என்பதில் தொடங்கி எந்த நேரத்தில் கைவரிசையைக் காட்டவேண்டும், மெஷின்கள் இருக்கும் அறையில் எத்தனைபேர் செல்லவேண்டும், வாகனத்தை எங்கிருந்து இயக்கவேண்டும் என்றெல்லாம் திட்டமிடுவது தலைவனின் வேலை. அதேபோல டீமில் இருப்பவர்கள் கொள் ளையடிக்கத் தயாராகும்போது கும்பலாக வரமாட்டார்கள். அதாவது, ஹரியானாவிலிருந்து தலைவன் விமானத்திலும், மற்றவர்கள் பஸ், ரயில், கார், லாரி என தலா 2 பேராக தனித்தனி யாக வருவார்கள். ஒரு கட்டத்தில் ஒன்றிணைந்து திட்டமிட்டு, பிறகு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட செயல்களில் மட்டும் கவனம் செலுத்துவர். கொள்ளையடிக்கப்பட்டதும் ஓரிடத்தில் இணைந்து பணத்தை ஆளாளுக்கு பிரித்துக் கொண்டு தனித் தனியாக முன்பு மாதிரி பிரிந்து சென்று விடுவர். ஓரிரு நாட்கள் கடந்தபிறகு மேவாட் மண்டலத்தில் ஒன்று சேர்வார்கள்.
மேவாட்டுக்குள் சென்றுவிட்டால் அவர்களைக் கண்டறிவது மிகக்கடினம். திருவண்ணாமலை கொள்ளையில் தொடர்புடையவர்கள் மேவாட் கொள்ளையர்கள் என தெரிந்ததும், அந்த மண்டலத்தில் நுழைய நம் போலீஸ் முயற்சித்தது. அப்போது, ஐ.ஜி. கண்ணனின் ஐ.பி.எஸ். நண்பர் சதீஸ்பாலன் ஐ.பிஎஸ்.தான் நம்முடைய போலீஸ் டீமுக்கு உதவினார். எஸ்.டி.எஃப் பிரிவைச் சேர்ந்த தனது ஆட்களை நம் போலீசாருடன் அனுப்பி வைத்தார் சதீஸ்பாலன்.
கொள்ளையர்களைப் பிடிக்க நம் டீம் நெருங்கிய சமயத்தில் பசுவின் காவலர்களுக்கும், இந்தி முஸ்லீம்களுக்கும் மோதல் வெடித்தது. நம்மை அடையாளம் கண்டுகொண்ட அப்பகுதியினர் போலீசாரை தாக்க முயற்சித்தனர். இதனால், மேவாட்டிலிருந்து வெளியே வரவேண்டியதிருந்தது. ஒருநாள் இடைவெளிக்குப் பிறகு ரகசியமாக மேவாட்டுக்குள் மீண்டும் நுழைந்த நம் போலீஸ் டீம், மலைக்குன்றுகளில் துரத்தி கொள்ளையர்கள் குதரத்பாஷா, அப்சர்உசேன் ஆகியோரை கைது செய்து இழுத்துவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில்... டெல்லி, ஹரியானா உள்ளிட்ட நகரங்களில் பதுங்கியிருந்த கொள்ளை யர்களின் தலைவர்கள் முகமதுஆசாத், முகமதுஆரிப் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட 75 லட்சத்தில் 5 லட்ச ரூபாயைத்தான் மீட்க முடிந்தது''’என்று விவரித்தனர் அதிகாரிகள்.
வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணனின் அறிவியல்பூர்வமான ஆபரேசனில் கொள்ளையர்கள் ஒரே வாரத்தில் பிடிபட்டதில் நிம்மதிப் பெருமூச்சு விட்டது தி.மு.க. அரசின் காவல்துறை!